வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 4 விழுக்காடாகவும், வங்கிகளிடம் இருந்து பெறும் வைப்புத் தொகைக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 3 புள்ளி மூன்று ஐந்து விழுக்காடாகவும் தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கித் தலைமையகத்தில் பேசிய அவர், உலகின் பிற நாடுகளில் இருந்து இந்தியா வேறுபட்ட மீட்சிப் போக்கைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பெருமளவில் தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுத்தது, போதிய முதலீடுகள், நிதி இருப்புகள் ஆகியவற்றின் உதவியுடன் பொருளாதாரம் மீட்சி கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வரும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 8 விழுக்காடாக இருக்கும் எனக் கணித்துள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார்.