கடந்த கால ஆட்சிகளில் நிகழ்ந்த கொடுமைகளை பாஜக ஆட்சி சரிப்படுத்தி வருவதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, விவசாயிகள் நலன்களுக்காவே வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதாகக் கூறினார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், பாஜக அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து வளர்ச்சியை நோக்கி செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்.
விவசாயிகளின் நலன்களுக்காவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும், அவர்களின் நலன்களுக்காகவே அவை திரும்பப் பெறப்பட்டதாகவும் மோடி குறிப்பிட்டார்.
மக்களுக்கு சேவை செய்வதில் பாஜக எப்போதும் முனைப்பாக உள்ளதாகக் குறிப்பிட்ட மோடி, ஐந்து மாநிலத் தேர்தலில் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத் தேர்தல் குறித்து பதிலளித்த மோடி, அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு பெரிய ஆபத்து என்றும் அவர் தெரிவித்தார்.
மாநிலங்களின் உரிமைகளை மதிப்பதாகத் தெரிவித்த மோடி, தாம் முதலமைச்சராக இருந்ததை சுட்டிக் காட்டி, மாநில அரசுகளின் பிரச்சினைகள் நன்றாகப் புரியும் என பதிலளித்தார்.
ராகுல் காந்தி குடும்பத்தினரை விமர்சிக்கவில்லை என்றும், நாட்டை ஆட்சி செய்த முன்னாள் பிரதமர்கள் பற்றித்தான் பேசுவதாகத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ராகுல் அமருவதே இல்லை என்றும், முக்கிய விவாதங்கள் நடைபெறும் போது அதைக் கேட்பதும் இல்லை என விமர்சித்தார்.
உலகின் மூத்த மொழியாக தமிழ் திகழ்வதாகத் தெரிவித்த மோடி, மாநிலங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவே, சீன அதிபரை தமிழ்நாட்டிற்கும், பிரான்ஸ் அதிபரை உத்தரப் பிரதேசத்திற்கும் அழைத்து சென்றதாகவும் விளக்கம் அளித்தார்.