கொரோனா தொற்றுக்கு பிறகு உலக நாடுகளின் எண்ணிங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, சர்வதேச அளவில் தலைமை பொறுப்பை இந்தியா முன்னெடுக்கும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் தெரிவித்து பேசிய அவர், இசையால் அவர் தேசத்தை ஒருங்கிணைத்ததாக புகழாரம் சூட்டினார்.
இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் ஏழைகளுக்கு எரிவாயு மற்றும் வீடுகள் வழங்கப்படுவதாக குறிப்பிட்ட பிரதமர், அரசின் திட்டங்கள் மூலம் ஏழைகளும் லட்சாதிபதிகளாக முடிந்திருப்பதாக கூறினார்.
எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகளுக்கு இடையிலும் தொடர்ந்து உரையாற்றிய அவர், 2ஆம் உலகப் போருக்கு பிறகு உலக நாடுகளின் வரிசையில் மாற்றங்கள் ஏற்பட்டதை போல், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலக நாடுகளின் எண்ணிங்களில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இந்த சூழலை இந்தியா ஒருபோதும் தவறவிடாது என்றும் நம் நாடு உலகத்திற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்து தனது குரலை ஓங்கி ஒலித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
1962ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியமைக்க முடியவில்லை என பேசிய பிரதமர், பல தோல்விகளை சந்தித்த பிறகும், காங்கிரசின் அகங்காரம் குறையவில்லை என்றார்.
தமிழர்களின் உணர்வுகளை காங்கிரஸ் புண்படுத்த முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய பிரதமர், பிபின் ராவத்தின் உடலை கொண்டு சென்ற போது சாலைகளில் நின்று இறுதி மரியாதை செலுத்திய தமிழக மக்களை வணங்குவதாக கூறினார்.
50 ஆண்டுகாலத்தில் இல்லாத அளவில் தற்போது வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், நாட்டில் விவசாய உற்பத்தியும் ஏற்றுமதியும் உச்சத்தை தொட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பேச்சின் போது, 'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்ற பாரதியாரின் வரிகளை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.