கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் அட்டை மட்டுமே கட்டாயமில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை விவரங்களை கட்டாயம் கோருவதாகக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையின்போது, தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டையை மட்டுமே அடையாள சான்றாக காண்பிக்க பொதுமக்களிடம் அறிவுறுத்தக்கூடாது என நீதிபதிகள் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து, தடுப்பூசி செலுத்துவதற்கு பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, ரேசன் அட்டை உள்ளிட்ட 9 அடையாள ஆவணங்களில் ஒன்றினை காண்பித்தால் போதுமானது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.
மேலும், அடையாள அட்டைகளை கோராமலே நாடு முழுவதும் 87 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த் அமர்வு வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.