பாரத ரத்னா விருது பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் இன்று காலமானார். அவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1929ஆம் ஆண்டு இந்தூரில் பிறந்த லதா மங்கேஷ்கர், திரையுலகில் மராத்தி, இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 இந்திய மொழிகளில் முப்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடிய அவர் இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்படுகிறார்.
திரைத்துறை சாதனைக்காக அவருக்கு 1989ஆம் ஆண்டு இந்திய அரசால் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு இந்தியாவில் குடிமக்களுக்கான உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 8 ஆம் தேதி மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு லதா மங்கேஷ்கருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த இரு நாட்களாக அவர் உடல்நிலை மேலும் நலிந்த நிலையில் இன்று காலையில் காலமானார். அவருக்கு வயது 92.
லதா மங்கேஷ்கரின் மறைவுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை பிறந்த ஒரு கலைஞர் என்றும், அவரது சாதனைகள் ஒப்பற்றவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது தெய்வீகக் குரல் அமைதியானாலும் அவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், லதா மங்கேஷ்கரின் மறைவால் சொல்லாணாத் துயருற்றதாகவும், அவரது மறைவு நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் தெரிவித்துள்ளார். வருங்காலத் தலைமுறையினர் அவரை நினைவுகூர்வர் என்றும், ஈடிணையற்ற அவரின் பாடல்கள் மனத்தை மயக்கும் திறனுள்ளவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவருடன் உரையாடியதை மறக்க முடியாது என்றும், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன் இசைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்துள்ளனர்.
லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி இன்றும் நாளையும் அரசுமுறைத் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், நடிகர்கள் அமிதாப் பச்சன், அனுபம் கேர், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், நடிகை சிரத்தா கபூர் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.