பருவநிலை மாற்றச் சிக்கலில் இருந்து விவசாயிகளைக் காக்க இயற்கை வேளாண்மை, டிஜிட்டல் வேளாண்மை ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்துவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் அருகே பதஞ்செரு என்னுமிடத்தில் பன்னாட்டுப் பயிர் ஆராய்ச்சி மையத்தின் ஐம்பதாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி வளாகத்தைத் திறந்து வைத்ததுடன், சிறப்பு அஞ்சல் தலையையும் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 2070ஆம் ஆண்டுக்குள் கரிப்புகை வெளியிடா நிலையை எட்ட இந்தியா இலக்கு வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை, இயற்கையோடு இயைந்த வாழ்வு ஆகியன பருவநிலை மாற்றச் சிக்கலைத் தடுக்க உதவும் எனத் தெரிவித்தார்.
பல நாடுகளுக்கு உதவிய பன்னாட்டுப் பயிர் ஆராய்ச்சி மையம், இந்திய வேளாண்துறையை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் தெரிவித்தார். 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் மீது அரசு அக்கறை கொண்டுள்ளதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் எண்ணெய்ப் பனை பயிரிடும் பரப்பை ஆறரை இலட்சம் எக்டேராக அதிகரிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.