மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
2022-23ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது, அவர் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.
இதையொட்டி மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து புறப்பட்ட நிர்மலா சீதாராமன், மரபுப்படி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். மத்திய நிதி இணை அமைச்சர்கள், பகவத் கிசன் ராவ் கரத், பங்கஜ் சவுத்திரி மற்றும் மூத்த அதிகாரிகள் அப்போது உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்றம் சென்றார்.
கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியில் இருந்து மீள வேண்டிய நிலை உள்ளதால், உள்கட்டமைப்பு திட்டங்கள், பொது சுகாதாரம், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, எம்பிக்களுக்கு வழங்குவதற்காக பட்ஜெட் பிரதிகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டன.