குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது.
குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் நிறைவாக முப்படைகளும் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி விஜய் சவுக் பகுதியில் நடைபெற்றது. முப்படைகளின் தலைவரும் குடியரசுத் தலைவருமான ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்த ஆண்டு நிகழ்ச்சியில் குறைந்த அளவிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
வண்ணமயமான சீருடைகள் அணிந்து இசைக்கருவிகளை வாசித்தபடி முப்படைகளின் இசைகுழுக்கள் நடத்திய அணி வகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தது. பல்வேறு துணை ராணுவ படையினரும் பங்கேற்ற இசை நிகழ்ச்சியில், 26 விதமான பேண்ட் இசை அணிவகுப்புகள் நடைபெற்றன.
முப்படைகளின் வீரர்கள் பல்வேறு வடிவங்களில் அணிவகுத்து நின்றது காண்போரை வெகுவாக கவர்ந்தது.
நிகழ்ச்சியின் நிறைவாக குடியரசு தலைவர் மாளிகை உள்ளிட்ட கட்டடங்கள் லேசர் மற்றும் மின் விளக்குகளால் வண்ணமயமாக ஒளிர்ந்தன. நாட்டின் பாரம்பர்யத்தை பறைசாற்றும் வகையிலும், ராணுவத்தின் வீரத்தை பெருமைப்படுத்தும் வகையிலும் லேசர் காட்சிகள் இடம்பெற்றன.
நிகழ்ச்சியின் இறுதியில் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவான ட்ரோன்கள் வானில் வர்ணஜாலம் காட்டி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின. இந்திய வரைபடம், மூவர்ணக்கோடி, மகாத்மா காந்தி போன்ற பல்வேறு வடிவங்களில் ஆயிரம் டிரோன்கள் ஒருங்கிணைந்து வானில் அணிவகுத்து நின்றன.