மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா தமக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை ஏற்க மறுத்து விட்டார்.
குடியரசு தினத்தையொட்டி அவருக்கு பத்மபூஷண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விருது அறிவிப்பு குறித்து எதுவும் தெரியாது என்றும், இந்த விருதை ஏற்க முடியாது என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவரது மனைவியிடம் தொலைபேசி மூலம் விருது பற்றிய தகவலைத் தெரிவித்ததாகவும், குடும்பத்தில் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. விருதுக்குரியவரின் பெயரை அறிவிக்கும் போது அவர் ஏற்பாரா மறுப்பாரா என்பதை தெரிந்து அறிவிக்கும் வழக்கம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தாம் தீவிர காங்கிரஸ்காரராக இருந்தபோதும் தமது தியாகத்தை அங்கீகரித்து மத்திய அரசு பத்மபூஷண் விருதை வழங்கியிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.