குடியரசு தினத்தை ஒட்டி, தலைநகர் டெல்லி, காவல்துறை கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், காவல்துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் 73ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக தலைநகர் டெல்லி முழுவீச்சில் தயாராகி வருகிறது. முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடியரசு தின விழா நடைபெறும் ராஜபாதையில் விழாவுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
முதன்முதலாக இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட லோக் அதாலத் அமைப்பை சித்தரிக்கும் அலங்கார ஊர்தியும் பங்கேற்கிறது. ராணுவத்தை சேர்ந்த 6 குழுக்கள் 70 ஆண்டு காலத்தில் இந்திய ராணுவத்தின் சீருடை, துப்பாக்கி ஆகியவை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை காட்சிப்படுத்த உள்ளன.
காலை பத்தரை மணியளவில் தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு குடியரசு தின விழா நிறைவடைகிறது. விழா தொடங்கும் முன்பாக, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக தேசிய மைதானத்தை முப்படைகளின் அணிவகுப்பு சென்றடையும். ராணுவ பலத்தை காட்டும் வகையில் அதிநவீன பீரங்கிகள், டாங்கிகள், ஆகாஷ் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெறும். மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், அதிநவீன ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப்படை சாகசமும் நடைபெறவுள்ளன.
இதனிடையே, டெல்லி முழுவதும் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் நிலவுவதாக உளவுப்பிரிவு தகவல் அளித்துள்ள நிலையில், எந்தவித அசம்பாவிதங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்புப்படை வீரர்களும், போலீசாரும் எந்நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விழாவுக்கு வருவோர் கண்டிப்பாக அடையாள அட்டைகள் கொண்டு வர வேண்டும்.
பார்க்கிங்கில் ரிமோட் கன்ட்ரோல் வசதியுள்ள கார் சாவிகளை ஒப்படைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கம். அங்கேதான் தங்களது கார் சாவிகளை ஒப்படைக்க வேண்டும். அனைவருமே 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதுடன், அதற்கான சான்றிதழையும் கையில் வைத்திருக்க வேண்டும். 15 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி கிடையாது.. குடியரசு தினத்தன்று, டெல்லியில் 27 ஆயிரத்து 723 போலீஸார் ஈடுபடவுள்ளனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. சென்னை காமராஜர் சாலையில் தமிழக அரசு சார்பில் நடைபெறவுள்ள விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
அதன் பின், முப்படை வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும். டெல்லி குடியரசு தினவிழாவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறுகின்றன. ஏற்கனவே திட்டமிட்டிருந்த 2 ஊர்திகளுடன் மேலும் இரண்டு புதிய ஊர்திகள் இணைக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்காக மொத்தம் 4 ஊர்திகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
முதல் ஊர்தியில், மங்கள வாத்திய இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி அரங்கேறும். அடுத்து வரும் மூன்று ஊர்திகளில், சுதந்திரத்திற்காக பாடுபட்ட வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், அழகுமுத்துகோன், முத்துராமலிங்க தேவர், பாரதியார், திருப்பூர் குமரன், வ.உ.சி, தந்தை பெரியார் உள்ளிட்டோரின் சிலைகள் இடம்பெறுகின்றன. குடியரசு தின விழா நடைபெறவுள்ள சென்னை காமராஜர் சாலையில் புதன்கிழமை அதிகாலை முதல் விழா நிறைவடையும் நேரம் வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.