இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நினைவாக 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அமர் ஜவான் ஜோதி என்ற அணையா விளக்கு போர் நினைவுச் சின்னத்துடன் இணைக்கப்படுகிறது.
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இந்தியா உதவியுடன் வங்கதேசம் தனிநாடாக உருவெடுத்தது. போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக, டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதி எனும் தீச்சுடர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் ஏற்றப்பட்டது.
இந்த நிலையில், 50 ஆண்டுகளாக எரிந்து வரும் அமர் ஜவான் ஜோதி, இன்று மாலை தேசிய போர் நினைவுச் சின்னத்தில் உள்ள ஜோதியுடன் இணைக்கப்பட உள்ளது. இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தேசிய போர் நினைவுச் சின்னம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இங்குப் போரில் மரணம் அடைந்த 25,942 வீரர்களின் பெயர்கள் தங்க எழுத்தில் கிரானைட் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன.