கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜலந்தர் முன்னாள் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லை அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்துக் கோட்டயம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பஞ்சாபின் ஜலந்தரில் பிஷப்பாகப் பணியாற்றிய பிராங்கோ முல்லக்கல், தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கன்னியாஸ்திரி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அவரைக் கைது செய்த கோட்டயம் காவல்துறையினர், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பாலியல் சுரண்டலில் ஈடுபடல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களைக் கேரள உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்ததுடன், வழக்கை எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த கோட்டயம் மாவட்ட நீதிமன்றம் பிராங்கோ முல்லக்கல் மீதான குற்றச்சாட்டுக்கள் மெய்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்தது.