தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சியில் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இடங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக மொத்தம் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு வழங்கிய நிதி 2,145 கோடி ரூபாயும் அடங்கும்.
இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். மேலும், மத்திய அரசு நிறுவனமான செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மைய வளாக கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் மருத்துவ திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றார். கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க வேண்டும் என்பதை தமிழக அரசு லட்சியமாக கொண்டுள்ளது என்ற அவர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வணக்கம் எனக்கூறி உரையாற்றத் தொடங்கினார். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், தைப் பிறந்தால் வழிப்பிறக்கும் என தமிழில் கூறினார். தாம் பிரதமராக பொறுப்பேற்ற 7 ஆண்டுகாலத்தில், 596 மருத்துவக் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உத்தரபிரதேசத்தில் ஒரே நேரத்தில் 9 மருத்துவ கல்லூரிகளை திறந்த தே சாதனையாக இருந்தது என்ற அவர்,. தமது சாதனையை தாமே முறியடிக்கும் வகையில் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை ஒரே நேரத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றார்.
ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அனைவருக்கும், தரமான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என்ற அவர், தமிழக அரசின் மருத்துவ திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட சுகாதாரத்துறை திட்டங்கள் மூலம், மக்களுக்கு தரமான, உயரிய மருத்துவ சிகிச்சை கிடைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மேம்படுத்துவதன் மூலம், தமிழ் குறித்த ஆய்வுகள் மேலும் சிறக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன'த்தின் புதிய கட்டிடம், தமிழ் மொழி மேலும் வளமடைய உதவும் என்று அவர் கூறினார். அனைத்து வகை படிப்புகளையும், அவரவர் தாய்மொழியில் பயில்வதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
தேசிய புதிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அனைவருக்கும், அனைத்திலுமான வளர்ச்சி என்ற உயரிய குறிக்கோளுடன் தமது தலைமையிலான அரசு செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ரவி, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு உள்ளிட்டோர் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றனர்.