இந்தியாவின் இரு முக்கிய சக்திகளாக ஜனநாயகமும் மக்கள்தொகையும் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை வெற்றிகரமாக செயல்பட நாட்டின் இளைஞர் சக்தியே காரணம், என்றும் அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் 2 நாட்கள் நடைபெறும் தேசிய இளைஞர் திருவிழாவை, காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசுகையில், பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். முன்னதாக, காலை 11 மணியளவில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 122 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தையும், கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தையும், பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்துவைத்தார்.
இதையடுத்து, புதுச்சேரியில் 2 நாட்கள் ஆன்லைனில் நடைபெறும் தேசிய இளைஞர் திருவிழாவில், பிரதமர் மோடி பங்கேற்று பேசுகையில், இந்தியாவில் தொழில்துறைக்கு ஏற்ற சூழல் உள்ளதால், தற்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், இதில் சுமார் 10 ஆயிரம் நிறுவனங்கள், தற்போதைய கொரோனா காலத்தில் கடந்த 6 அல்லது 7 மாதங்களில் தொடங்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் கலந்துகொண்டனர்.