பிரதமர் மோடி பஞ்சாப் சென்றிருந்தபோது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஜன.5ம் தேதி பஞ்சாப் சென்றிருந்தபோது, பிரதமரின் வாகனம் மேம்பாலத்தில் அரை மணி நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் போராட்டம் நடத்திய விவசாய சங்கத்தினர் சாலையை மறித்தனர்.
பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட விசாரணைகளுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.