நாடு முழுவதும் இரண்டு தவணைத் தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்களப் பணியாளர்களுக்கும், பிற நோயுள்ள மூத்த குடிமக்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க மருத்துவப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள், காவல்துறையினர் ஆகிய முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் எனப் பிரதமர் அறிவித்தார்.
அதன்படி நாடு முழுவதும் இன்று பூஸ்டர் தடுப்பூசி போடும் இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மூத்த குடிமக்கள் இரண்டுகோடியே 75 இலட்சம் பேர், மருத்துவப் பணியாளர்கள் ஒருகோடிப் பேர், முன்களப் பணியாளர்கள் இரண்டுகோடிப் பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதியானவர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தங்களுக்கு எந்தப் பக்க விளைவும் இல்லை என்றும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அரசு யுனானி மருத்துவமனையில் அமைச்சர் ஹரீஷ் ராவ் முன்னிலையில் இணைநோயுள்ள மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் இயக்கம் தொடங்கியது.
இதேபோல் பீகாரில் பாட்னா அரசு மருத்துவமனையிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. `பெங்களூர் அரசு மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியைக் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தொடக்கி வைத்தார்.