மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடும், முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கியதை அனுமதித்துள்ள உச்சநீதிமன்றம், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை நடத்தவும் அனுமதித்துள்ளது.
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடும், முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 விழுக்காடும் ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசும், மருத்துவக் கலந்தாய்வுக் குழுவும் அறிவிப்பு வெளியிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், போபண்ணா அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலையடுத்து முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவில், நடப்புக் கல்வியாண்டில், மத்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையின்படி முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை நடத்த அனுமதித்துள்ளது