பஞ்சாபில் பிரதமருக்குப் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய முறையீட்டை நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
பஞ்சாபில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைக்கப் பிரதமர் மோடி சென்றபோது பிரோஸ்பூரில் அவரை வழிமறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்காமல் பிரதமர் திரும்பிச் சென்றார்.
இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரமணா அமர்வில் மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் முறையிட்டார். அப்போது மனுவின் நகல்களை மத்திய அரசுக்கும் பஞ்சாப் அரசுக்கும் வழங்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த முறையீட்டை நாளை விசாரிப்பதாக அறிவித்தனர்.
இதனிடையே பிரதமருக்குப் பாதுகாப்புக் குறைபாடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி மேத்தாப் சிங் கில் தலைமையில் மூன்று உறுப்பினர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்துள்ள பஞ்சாப் அரசு, மூன்று நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.