ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 படகுகளுக்குத் தீ வைக்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட சிறிய கண்ணிகளைக் கொண்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும்போது, மீன் குஞ்சுகள் முதல் அதில் சிக்குவதால், மீன் வளம் பாழாகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
தமிழக மீனவர்களிடையே இது தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், ஆந்திர மீனவர்களிடையேயும் இதே பிரச்சனை வலுத்து வருகிறது. அங்கு சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்களுக்கும் சாதாரண வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டதில் 4 படகுகளுக்குத் தீ வைக்கப்பட்டது.
கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர்களை அனுப்பி, மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அப்பகுதியில் மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.