ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பதை அடுத்து ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளை மாநில அரசுகளே விதிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து ஊரடங்கு குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் தொற்று அதிகரித்துள்ள நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் கொரோனா வழிகாட்டு முறைகள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
ஒமைக்ரான் பரவாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். மாநில அரசுகள் போர்க்கால ஆயத்த அறைகளையும், அவசரகால நடவடிக்கை மையங்களையும் ஏற்படுத்த வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 188 பிரிவின் கீழ் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும், தேவைப்பட்டால் மாநில அரசுகளே ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சென்னையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் புதிய தரவு அலகு மையத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,இரவு நேர ஊரடங்கு விதிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் தலைமையில் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறினார். அந்த ஆலோசனைக்கு பின்னர் முதல்-அமைச்சர் இதுதொடர்பாக முடிவெடுப்பார்” என்று அவர் தெரிவித்தார்.