ஒமைக்ரான் பரவுவதைத் தடுக்க மக்கள் கடும் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவுக்கு எதிரான யுத்தம் முடிந்துவிடவில்லை என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் பாதிப்புடையோரின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்து, இந்தியாவில் 300 ஐ கடந்துவிட்டது. நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரானை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசு அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். அனைத்து மட்டங்களிலும் ஒமைக்ரான் ,கொரோனா பரவலைத் தடுக்க வேண்டும் என்றும் 2 தடுப்பூசி டோஸ்களை அனைவருக்கும் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். மாநில அரசுகள் 2 டோஸ் தடுப்பூசியை 100 சதவீதம் பூர்த்தி செய்யுமாறும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநில அரசுகளின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுடன் மத்திய அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மத்திய குழுக்களை அனுப்பி நிலைமையைக் கண்காணிக்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான யுத்தம் முடிந்துவிடவில்லை என்று எச்சரித்துள்ள பிரதமர் மோடி பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் இரவு நேர ஊரடங்குகள் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறும் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.