வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்தும், அவரைத் தேர்வு செய்த காரணங்கள் குறித்தும் ஊடகங்கள் மூலம் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார்.
40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. அங்குத் தேர்தல் நடத்துவது குறித்துப் பனாஜியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா ஆலோசனை நடத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில எல்லைகள், கடற்பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். வங்கிகளில் சந்தேகத்துக்கிடமான பணப் பரிமாற்றம் இருந்தால் தெரிவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வேட்பாளர்களின் தகுதிகள் மற்றும் பின்னணி குறித்த தகவல்கள் வாக்காளர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்தார்.