திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உதய அஸ்தமன சேவை தரிசனத்திற்கான சிறப்பு டிக்கெட்டின் விலை, ஒன்றரை கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கு தினமும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, கல்யாண உற்சவம் என பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றன. இவை அனைத்தையும் நாள் முழுவதும் தரிசனம் செய்யும் வகையில், உதய அஸ்தமன சேவை எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இதில் பங்கேற்க சாதாரண நாட்களில் ஒரு கோடி ரூபாயும், வெள்ளிக்கிழமைக்கு மட்டும் ஒன்றரை கோடி ரூபாயும் செலுத்தினால், ஆண்டுக்கு ஒரு நாள் என்ற அடிப்படையில், 25 ஆண்டுகளுக்கு இந்த சிறப்பு தரிசனத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி, கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு செலவிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதற்கான 531 சிறப்பு டிக்கெட்டுகள் விரைவில் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.