தூய்மை, படைப்பு புத்தாக்கம், தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான விடாமுயற்சி ஆகிய மூன்று தீர்மானங்களையும் நமக்காக அல்லாமல் நாட்டுக்காக ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் காசி விசுவநாதர் கோவில் வளாகத்தைத் திறந்து வைத்த பின், உள்ளூர் மக்களின் மொழியான போஜ்புரியில் பிரதமர் மோடி உரையாற்றினார். மிகப்பெரிய வளாகத்தைக் கட்டிக் கொடுத்த ஒவ்வொரு தொழிலாளருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
கொரோனா சூழலிலும் தடைபடாமல் பணி தொடர்ந்து நடைபெற்று வந்ததாகத் தெரிவித்தார். தனது பண்பாடு, திறமையின் மீதுள்ள நம்பிக்கை ஆகியவற்றால் புதிய இந்தியா பெருமிதம் கொள்வதாக மோடி கூறினார். தூய்மை, படைப்பு புத்தாக்கம், தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான விடாமுயற்சி ஆகிய மூன்று தீர்மானங்களையும் நமக்காக அல்லாமல் நாட்டுக்காக ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.
கோவில் வளாகக் கட்டுமானப் பணியைச் செய்த தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து பிரதமர் மோடி உணவருந்தினார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து கோவில் வளாகத்தைச் சுற்றிப் பார்வையிட்ட பிரதமர் மோடி அங்கிருந்து படகில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார்.