ஒமிக்ரான் பரவல் ஏற்பட்ட மகராஷ்ட்ரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
ஒமிக்ரான் பரவி வரும் நிலையில் 27 மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் நடைபெற்ற பரிசோதனைகளின் அடிப்படையில் 32 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் நேற்று ஒருவருக்கு நோய்த்தொற்று பரவியதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள மாநிலங்களின் 27 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு, பொதுமக்கள் கூட்டமாகத் திரள்வதைத் தடை செய்தல், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு வரம்பு விதித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் பாதிப்புள்ள 7 பேரை அடையாளப்படுத்தி மும்பை நகரில் இன்று வரை 144-தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இதுவரை 132 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.