அதிகத் தொலைவு செல்லும் பினாகா ஏவுகணையை மல்ட்டி பேரல் ஏவுகணைச் செலுத்து அமைப்பு மூலம் செலுத்தி இந்தியா வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு பினாகா வகையைச் சேர்ந்த 5 ஏவுகணைகளை ஏற்கெனவே செலுத்திச் சோதித்துள்ளது. இவற்றின் அதிகப்பட்ச இலக்குத் தொலைவு 75 கிலோமீட்டராகும். இந்நிலையில் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் வகையிலான பினாகா ஏவுகணையைப் புனேயில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகம் வடிவமைத்துத் தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையை ராஜஸ்தானின் போக்ரானில் மல்ட்டி பேரல் ஏவுகணைச் செலுத்து அமைப்பின் மூலம் வெற்றிகரமாகச் செலுத்திச் சோதித்துள்ளது.
பினாகா வகை ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் கடந்த பத்தாண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பெருகி வரும் தேவைக்கேற்ப உயர் தொழில்நுட்பத்துடன், அதிகத் தொலைவு செல்லும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு வடிவமைத்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை டாட்டா, எல் அண்ட் டி ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு வழங்கித் தேவையான ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது. இதற்கான ஏவுகணைச் செலுத்து அமைப்பு வாகனத்தைப் பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த்மூவர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.