தந்தை இல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு, குஜராத்தில் ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது. சூரத் நகரில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு, தொழிலதிபர் மகேஷ் சவானி என்பவர் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்திருந்தார்.
இதில், 3 இஸ்லாமிய பெண்கள், ஒரு கிறிஸ்தவ பெண் உட்பட மொத்தம் 135 தந்தை இல்லாத பெண்களுக்கு, அவர்களது மத வழக்கப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. மேலும் மணப்பெண்ணுக்கு தேவையான சீர்வரிசையும் வழங்கப்பட்டது. ஒரு தந்தையை போல் மகேஷ் சவானி தங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், இது மகிழ்ச்சி அளிப்பதாகவும் திருமணப் பெண்கள் தெரிவித்தனர்.
இந்த பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மகேஷ் சவானி, வைர வியாபாரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.
மேலும், பள்ளிகள், பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனையையும் நடத்தி வருகிறார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட இவர், ஆண்டுதோறும் இவ்வாறு தந்தை இல்லாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.