ராஜஸ்தானின் ஜெய்சல்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையின் ஆண்டுவிழாவில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புப் படைகளிலேயே முன்வரிசையில் இருப்பது எல்லைப் பாதுகாப்புப் படைதான் எனப் பெருமையுடன் தெரிவித்தார்.
1965ஆம் ஆண்டு டிசம்பர் முதல் நாளில் எல்லைப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. அதன் 57ஆம் ஆண்டுத் தொடக்கத்தையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீரில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு வீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்டார்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் குதிரைப் படை, ஒட்டகப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அமித் ஷா ஏற்றுக்கொண்டார். எல்லைப் பாதுகாப்புப் படையில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் பதக்கங்களை அணிவித்துப் பாராட்டுச் சான்றிதழ்களையும் அமித் ஷா வழங்கினார்.
படைப்பிரிவில் உள்ள மோப்ப நாய் பூக்கூடையைக் கொண்டு சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கொடுத்ததுடன், பயங்கரவாதியைக் கடித்தல், தடை தாண்டுதல், கயிற்றில் நடத்தல், வெடிகுண்டு கண்டெடுத்தல் ஆகிய பயிற்சிகளையும் செய்து காட்டியது.
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஒட்டகத்தில் நின்றுகொண்டு சென்றதுடன், காயமடைந்த வீரர்களை ஒட்டகம் சுமந்து செல்லுவதையும் செயல்விளக்கமாகச் செய்து காட்டினர். ஒரு ஜீப்பில் ஏறிவந்த வீரர்கள் குறுகிய நேரத்தில் அந்த ஜீப்பைத் தனித்தனியாகக் கழற்றி மீண்டும் ஒன்று சேர்த்துக் காட்டினர்.
வீரர்களும் வீராங்கனைகளும் ஸ்கூட்டர்களில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர். நாட்டின் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில் பல்வேறு அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.
எல்லைப் பாதுகாப்புப் படையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களையும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்வையிட்டார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புப் படைகளிலேயே முன்வரிசையில் இருப்பது எல்லைப் பாதுகாப்புப் படை தான் என்றும், அரசைப் பொறுத்தவரை எல்லைப் பாதுகாப்பு என்பது நாட்டின் பாதுகாப்பு என்றும் தெரிவித்தார்.
காவல்துறை, எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ஆயுதக் காவல் படை ஆகியவற்றைச் சேர்ந்த 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் நாட்டுக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு நாட்டின் சார்பில் தாம் அஞ்சலி செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.