வங்கக்கடலில் உருவாகி உள்ள ஜாவத் புயல், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசாவின் பூரி நகர் அருகில் நாளை நண்பகலில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஜாவத் என பெயரிடப்பட்ட புயல் இன்று காலை நிலவரப்படி, தென்கிழக்கு விசாகப்பட்டினத்தின் 250 கிலோ மீட்டர் தொலைவிலும், தெற்கு கோபால்பூர் ஒடிசா பகுதியில் 360 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜாவத் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோர பகுதியை இன்று காலை நெருங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவின் பூரி நகர் அருகில் நாளை நண்பகல் கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து வடக்கு வடகிழக்கு ஒடிசா கடல் பகுதி, வங்கக் கடல் பகுதியில் வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் கன மற்றும் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.