வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று புயலாக உருவெடுத்து நாளை காலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கிழக்கு வங்கக் கடல் அதனை ஒட்டிய அந்தமான் கடல்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இன்று மத்திய வங்கக் கடலில் புயல் சின்னமாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே நாளை காலை தீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜாவத் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், கரையைக் கடக்கும்போது 70முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை அதிகாரிகள், ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புயல் பாதிப்பைத் தவிர்க்கவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடவும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
ஜாவத் புயலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட வேண்டும் எனவும், மின்சாரம், தொலைதொடர்பு, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய சேவைகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பிரதமர் உத்தரவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாகை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.