"லிங்க்டு இன்" சமூக வலைத்தளம் தற்போது இந்தியில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய மொழிகளில் முதல்முறையாக, இந்தியில் இந்த சமூக வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக தகவல்களை, இணையதளம் மற்றும் செயலி மூலம் வழங்கி வரும் "லிங்க்டு இன்", அமெரிக்காவை சேர்ந்த பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டுக்கு சொந்தமானதாகும். இந்தி பேசும் 60 கோடி மக்களை குறிவைத்து இந்த புதிய வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உலகளவில் 25 மொழிகளில் "லிங்க்டு இன்" செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில் தான் அதிகம் பேர், அதாவது 8 கோடியே 20 லட்சம் பேர் இந்த சமூக வலைத்தளத்தை பயன்படுத்துகின்றனர். "லிங்க்டு இன்" இந்தி சமூக வலைத்தளம் மூலம், தங்களுக்கு எளிதான மொழியில் மக்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, அதன் இந்திய பிரிவுக்கான நிர்வாகி அஷுதோஷ் குப்தா தெரிவித்துள்ளார்.