தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக உருமாற வாய்ப்புள்ளது எனவும், இது ஒடிசாவின் பூரிக்கும் - ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் பகுதிக்கும் இடையே கரையைக் கடக்கக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது, டிசம்பர் 2-ந் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும். தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதோடு, அது, தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையிலேயே நகர்ந்து, தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திராவை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி ஒடிசா - ஆந்திராவை நோக்கிச் செல்வதால், தமிழகத்தில் மழை பொழிவதற்கான வாய்ப்பு குறைவு எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தெற்கு அந்தமான் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 3ஆம் தேதி வாக்கில் புயலாக உருமாறுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிதாக உருவாகும் புயல் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசாவின் பூரி மாவட்டத்திற்கும் இடையே, கோபால்பூர் அருகே டிசம்பர் 4-ந் தேதி நண்பகலில் கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக, ஒடிசா, ஆந்திரா மாநிலங்களில் கன முதல் மிககனமழை பெய்யக்கூடும் எனவும், குஜராத் மகராஷ்டிரா மாநிலங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ந் தேதி முதல் 5தேதி வரையில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், மணிக்கு 70 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உஷார் நிலையில் இருக்குமாறு ஒடிசா அரசு எச்சரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் ஒடிசா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.