ஒமிக்ரான் வைரஸ் 17 நாடுகளுக்குப் பரவியுள்ள நிலையில், அதனைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு நாளை முதல் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.
தென்ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ், இந்த வாரத்திற்குள் 10 ஆயிரம் பேரைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுவரை 17 நாடுகளில் ஒமிக்ரான் தொற்று காணப்பட்டுள்ளதால் உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
இந்நிலையில், நாளை முதல் விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முடிவு செய்துள்ளது. அதன்படி,ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள், விமானநிலையங்களில் RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டாலும்,
ஒரு வாரம் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்,8வது நாள் மீண்டும் சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொற்று அபாயம் குறைந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள், ஒரு முறை மட்டுமே RT-PCR சோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. ஆனால் மத்திய அரசு கூறும் முன்பாக, சில மாநிலங்கள் தாங்களாகவே மேற்கூறிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து,ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் தொற்று குறித்த அச்சத்தைப் போக்கிட நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அல்லது வயதானவர்கள் மற்றும் தொற்று காரணமாக அதிக அபாயம் உள்ளவர்களுக்கு கூடுதல் டோஸ் தடுப்பூசி போட பரிசீலித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டத்தில் அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் இறுதி ஒப்புதலுக்காக மத்திய சுகாதாரத்துறைக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.