ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு வழக்கமான சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்கும் முடிவை ஆய்வு செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாற்றம் பெற்ற வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேச்சரிக்கை நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அவசர ஆலோசனை நடத்தியது. உள்துறை செயலாளர் அஜய் பல்லா தலைமையில் நடந்த கூட்டத்தில் பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் உலக நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவலின் தாக்கம் தொடர்பாகவும், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கொரோனா பரிசோதனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.