நாட்டுக்கும் மக்களுக்கும் தொண்டாற்றுவதே தமது இலக்கு என்றும், அரசின் திட்டங்களால் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றுவது தமக்கு மனநிறைவை அளிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மனத்தின் குரல் என்னும் பெயரில் 83ஆவது முறையாக வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை என்றும், கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி நம்மையும், நம் அன்புக்குரியோரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்குத் தொண்டாற்றுவதே தமது இலக்கு என்றும், அரசின் திட்டங்களால் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றுவது தமக்கு மனநிறைவை அளிப்பதாகவும் தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தின் ஜலாவுன் என்னுமிடத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் ஒன்றாக இணைந்து நூன் என்கிற ஆற்றுக்குப் புத்துயிர் அளித்ததை எடுத்துக் கூறிய அவர், அனைவரின் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபடுதல் என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும் எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட யூனிகார்ன் நிறுவனத்தின் மதிப்பு ஏழாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதாகவும், இதேபோல் புதிதாகத் தொடங்கப்பட்ட 70 நிறுவனங்கள் ஏழாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். உலக அளவிலான சிக்கல்களுக்கு அவை தீர்வை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். ஆண்டுக்கு ஆண்டு புதிய நிறுவனங்கள் சாதனை அளவில் முதலீட்டை ஈர்த்து வருவதாகத் தெரிவித்தார்.
நாடு விடுதலை பெற்றதன் 75ஆம் ஆண்டு விழா, 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் வென்றதன் பொன்விழா ஆகியவற்றைப் பல்வேறு வகைகளில் கொண்டாடி வருவதாகத் தெரிவித்தார். டிசம்பர் மாதத்தில் கடற்படை நாள், கொடிநாள் ஆகியன கொண்டாடப்பட உள்ளதைக் குறிப்பிட்ட அவர், இந்நாளில் நமது படைகளையும், அவற்றின் வீரர்களையும், அவர்களை ஈன்ற அன்னையர்களையும் நினைவுகூர்வதாகத் தெரிவித்தார்.
விடுதலைப் போராட்டத்தில் ஜான்சி, பந்தேல்கண்ட் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதுடன், ராணி இலட்சுமிபாய், ஜல்காரி பாய் ஆகிய வீராங்கனைகளும், ஹாக்கி வீரர் தயான்சந்தும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்.