தனியார் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கும் மசோதா, வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ரிசர்வ் வங்கியின் மூலம் இந்தியாவின் பிரத்தியேக டிஜிட்டல் பணம் பகிர்வதற்கும் சட்டமசோதா வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம் பல நாடுகளில் பிரபலமடைந்து வருகிறது. பிட்காயின், எத்தீரியம், லைட்காயின், டீத்தர், சொலானா போன்ற கிரிப்டோகரன்சிகளில் அதிகளவில் பரிவர்த்தனை செய்கின்றனர். ஒரு பிட்காயின் மதிப்பு தற்போதைய நிலவரப்படி 42 லட்சத்து 83 ஆயிரம் ரூபாயாகும்.
டிஜிட்டல் நாணயங்களில் முதலீடு தொடர்பான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு ஏராளமானோர் முதலீடு செய்வதால், கிரிப்டோகரன்சி பொருளாதார ரீதியாக புதிய சவாலை ஏற்படுத்தி வருகிறது.
பிரதமர் மோடி தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், தனியார் கிரிப்டோகரன்சியால் நிதிமோசடிகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி செல்லும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் 2 கோடி கிரிப்டோ முதலீட்டாளர்கள் இருப்பதாகவும், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. , தனியார் டிஜிட்டல் கரன்சிக்குத் தடை விதிக்கப்பட்டால் இந்நிறுவனங்கள் பேரிழப்பை சந்திக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
கிரிப்டோ கரன்சியை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரையில், கிரிப்டோகரன்சி நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிரிப்டோ கரன்சியை முறைப்படுத்தும் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. தனியார் கிரிப்டோகரன்சிக்கள் அனைத்தையும் தடை செய்ய கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய கட்டுபாடு மசோதா-2021 வகை செய்கிறது. அதேநேரம் ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வமான மின்னணு கரன்சியை அறிமுகம் செய்யவும் வழிவகை செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.