ஊழல் வழக்கில் மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் காவலை 14 நாள் நீட்டித்துள்ள சிறப்பு நீதிமன்றம், வீட்டு உணவுக் கோரிக்கையையும் ஏற்க மறுத்துவிட்டது.
அனில் தேஷ்முக் அமைச்சராக இருந்தபோது மும்பையில் உள்ள உணவகங்கள், மது விடுதிகளில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப் பதிந்தது. இந்த வழக்கில் அவரிடம் 12 மணி நேரம் விசாரித்த அமலாக்கத்துறை நவம்பர் முதல் நாள் கைது செய்தது.
சிறையில் இருந்த அவரை இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது வீட்டு உணவுக் கோரிக்கையை மறுத்த நீதிபதி, சிறையில் வழங்கும் உணவை முதலில் உண்ணட்டும், முடியாவிட்டால் வீட்டு உணவு வழங்குவது பற்றிப் பரிசீலிக்கலாம் எனத் தெரிவித்துவிட்டார்.
மூப்பையும் உடல்நிலையையும் கருத்திற்கொண்டு ஒரு படுக்கையை வழங்க அனுமதித்தார்.