கேரளத்தின் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலப் பூசைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது.
மலையாளக் கொல்லம் ஆண்டுக் கணக்கின்படி நாளை முதல் மண்டலப் பூசை தொடங்குகிறது. இதற்காக இன்று மாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டுக் கருவறையில் விளக்கேற்றப்பட உள்ளது. நாளை முதல் நான்கு நாட்கள் கோவிலுக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். முன்னதாக நிலக்கல்லில் 5 உடனடிப் பதிவு மையங்கள் அமைத்து, ஒருநாளைக்கு 30 ஆயிரம் பேரைத் தரிசனத்துக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
கேரளத்தின் தென்மாவட்டங்களில் மழை பெய்து வருவதைக் கருத்திற்கொண்டு தரிசனத்துக்கு உடனடிப் பதிவு முறை நிறுத்தப்பட்டுள்ளது. பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் ஆற்றில் நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் பிந்தைய நாட்களில் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கும் மண்டலப் பூசை டிசம்பர் 16ஆம் நாள் தங்க அங்கி அணிவிக்கும் வழிபாட்டுடன் நிறைவடையும்.