கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்திருந்த நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் மூலம் மேற்கொள்ளப்படும் இணைய வழி பணப்பரிவர்த்தனையில் முறைகேடுகள் குறித்த புகார்கள் அதிகரித்து வருவதால், டிஜிட்டல் கரன்சி முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கும்படி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார். எந்த மத்திய வங்கிகளாலும் கட்டுப்படுத்தப்பட முடியாத கிரிப்டோகரன்சி பணப்பரிவர்த்தனைகள் குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி உள்ளிட்ட நிதி அமைப்புகள் கவலை தெரிவித்தன.
இந்தநிலையில் கிரிப்டோகரன்சி தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்பது நாட்டின் எல்லைகளைத் தாண்டிய பிரச்சினை என்பதால் பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புடன் இதன் பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதத்திற்கு டிஜிட்டல் கரன்சி பயன்படுத்தப்படுகிறதா என்பதை உன்னிப்பாக கண்காணிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இணைய வழி சூதாட்டம் போன்ற தவறான பாதையில் இளைஞர்களை வழிநடத்தவும் டிஜிட்டல் பணம் பயன்படுத்தப்படக் கூடாது என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அடுத்த வாரத்தில் ரிசர்வ் வங்கி இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய உள்ளது.