வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக அறிவித்த வானிலை ஆய்வு மையம், இன்று புதுக்கோட்டை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 11ஆம் தேதி காலை தமிழக கரையை நெருங்ககூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று தென்காசி, நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழைக்கும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.