டெல்லியில் மூன்றாண்டுகளில் இல்லாத வகையில் தீபாவளிக்கு மறுநாள் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது. காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்கணிப்பு ஆராய்ச்சி அமைப்பு டெல்லியில் காற்று மாசுபாட்டை அளவிட்டு வருகிறது.
காற்றுத் தரக் குறியீடு 100 வரையிருந்தால் மாசுபாட்டின் அளவு திருப்தி என்றும், 200 வரை இருந்தால் மிதமானது என்றும், 300 வரை இருந்தால் மோசம் என்றும், 400 வரை இருந்தால் மிக மோசம் என்றும், நானூற்றுக்கு மேல் இருந்தால் தீவிரநிலை என்றும் கருதப்படுகிறது.
அக்டோபர் மாதத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில் காற்று மாசு குறைந்து இருந்ததாகவும், கடந்த மூன்று நாட்களில் வெடிகள் கொளுத்தியதாலும், வைக்கோலை எரித்ததாலும் காற்றுமாசு அதிகரித்ததாகவும் டெல்லிச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் தெரிவித்துள்ளார்.
வியாழன் இரவு முதல் காற்று மாசு தீவிரநிலையை அடைந்து வெள்ளி பிற்பகல் 3 மணிக்குக் காற்றுத் தரக் குறியீடு 531 என்கிற அளவுக்குத் தீவிரமடைந்தது.