பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் பெட்ரோலிய எரிபொருளை விட்டு சூரிய ஒளிக்கு மாற வேண்டிய தொழில்நுட்பத்தை வளர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நாடுகளுக்கு இடையே சூரியஒளி மின்சாரத்தை பகிர்ந்துகொள்ளும் திட்டத்தை செயல்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஐநா.சபை சார்பில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் மாநாட்டில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, பூமியைக் காக்க ஒரே சூரியன் ஒரே உலகம் ஒரே கிரிட் என்ற கொள்கையை அறிவித்தார். இதற்கு 80க்கும் மேற்பட்ட நாடுகள் உடனடியாக ஆதரவு தெரிவித்துள்ளன.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் ஆலோசித்த மோடி, "Green Grids Initiative என்ற கூட்டுத் திட்டத்தை அறிவித்தார். இதன் மூலம் உலகின் பசுமையை பாதுகாக்க மின்சார கிரிட்டுகளை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தூய்மையான மின்சக்தி, மோட்டார் வாகனத் துறையில் பூஜ்யம் கார்பன் கழிவு, ஸ்டீல் உற்பத்தியிலும் பூஜ்யத்தை நெருங்கும் அளவில் கார்பன் வெளியேற்றம், சூழலுக்குப் பொருத்தமான விவசாயம் என்பது உள்ளிட்ட 5 அம்சங்களை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.
இஸ்ரோ மூலமாக சோலார் ஒளியை கணக்கிடும் சிறப்பு தளத்தை உருவாக்கி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், அதன் மூலம் புயல், கடலோரப் பகுதிகள், பவளப் பாறை கண்காணிப்பு தொடர்பான தகவல்கள் வழங்கப்படும் என கூறினார்.
பெட்ரோலியத்தால் உலகின் சுற்றுச் சூழல் மாசு பட்டிருப்பதை சுட்டிக் காட்டிய மோடி, மனித குலத்தைப் பாதுகாக்க சூரிய ஆற்றலுக்கான தொழில்நுட்பத்தைத் தத்தெடுக்குமாறு உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டார்.