ரோம் நகரில் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது மிகுந்த பயனுள்ளதாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவுக்கு சென்றடைந்த பிரதமர் மோடி இன்று பருவநிலை மாநாட்டில் பங்கேற்கிறார்.
ரோம் நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஜி 20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி இடையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரான்ஸ் அதிபர் மாக்ரோன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்
கொரோனா பேரிடர், பொருளாதாரம், சுகாதார அடித்தளத்தைப் பலப்படுத்துவது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து உலக நாடுகளின் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் மிகுந்த பயன் அளிப்பவையாக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜி 20 மாநாடு நிறைவு பெற்றபோது அனைத்துத் தலைவர்களும் ஒருமனதாக கொரோனா உலகம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டிய ஒரு பேரிடர் என்பதை ஏற்பதாக ரோம் பிரகடனத்தை அறிவித்தனர்.
மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, ரோம் நகரில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரை அடைந்தார். அங்கு நட்சத்திர ஓட்டலில் இந்திய வம்சாவளியினர் சார்பில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
கிளாஸ்கோவில் 120 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உலக நாடுகளின் உச்சி மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பேச்சு நடத்துவார்.சுற்றுச் சூழல் , கரியமில வாயு வெளியேற்றம் குறைப்பு தொடர்பான இந்தியாவின் நிலையை அப்போது பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.