ஆந்திரத்தில் விசாகப்பட்டினம் உருக்காலையைத் தனியாருக்கு விற்பதை எதிர்த்து ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
ராஷ்டிரிய இஸ்பத் நிகம் லிமிடெட் என்னும் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் செயல்படும் விசாகப்பட்டினம் உருக்காலையைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஆலைத் தொழிலாளர்களும் ஆந்திரத்தின் அனைத்துக் கட்சிகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் உருக்காலையைத் தனியாருக்கு விற்பதைக் கண்டித்துத் தொழிலாளர்கள் அனைத்துக் கட்சியினர் இணைந்த போராட்டக் குழுவினர் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இருந்து உருக்காலை வரை பேரணியாகச் சென்றனர்.
ஏராளமானோர் பங்கேற்ற இந்தப் பேரணியில் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் கலந்துகொண்டு ஆலையைத் தனியாருக்கு விற்பதைக் கண்டித்து உரையாற்றினார்.