முல்லைப்பெரியாறு அணையின் பல்வேறு பகுதிகளில் கேரள அமைச்சர்கள் ஆய்வு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் அக்டோபர் 28ஆம் நாள் மாலையில் அணைக்கு ஆய்வு நடத்தினார்.
வெள்ளியன்று இரண்டாவது முறை அவர் அணைக்குச் சென்றபோது, மூன்று மதகுகளைத் திறந்து இடுக்கி அணைக்குத் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சனியன்று ஆறு மதகுகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை மூன்றாவது முறையாக அணைக்குச் சென்ற கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் நீர்வெளியேறும் மதகுப்பகுதியைப் பார்வையிட்டார்.
நீர்த்தேக்கப் பகுதியில் படகில் சென்று பெரிய அணை உள்ள பகுதியையும் பார்வையிட்டார். அவருடன் கேரள விவசாயத் துறை அமைச்சர் பிரசாத் மற்றும் அதிகாரிகளும் படகில் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
கேரள அமைச்சர் ரோசி அகஸ்டின் தேக்கடியில் உள்ள கேரள அரசின் சுற்றுலா மாளிகையான ஆரண்ய நிவாசில் ஒரு வாரக் காலமாகத் தங்கியிருந்து அடிக்கடி அணைக்குச் சென்று வருவதாகக் கூறப்படுகிறது.