சர்தால் வல்லப் பாய் பட்டேலின் 147ஆவது பிறந்த நாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாகக் கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே முன்னேற முடியும், இலக்கை அடைய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப்பிரதமராகவும் இருந்த சர்தார் வல்லப் பாய் பட்டேல் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட சிற்றரசுகளை இந்திய ஒன்றியத்துடன் ஒருங்கிணைப்பதில் பெரும்பங்காற்றியதால் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார். 2014ஆம் ஆண்டுமுதல் அவர் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் நாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், இந்தியா என்பது நிலப்பரப்பு மட்டுமல்ல தரமான கொள்கைகள், தீர்மானங்கள், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றால் நிரம்பியது என்றும், 135 கோடி மக்களின் எண்ணங்கள், கனவுகள், மனம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் தெரிவித்தார்.
ஒரு படகில் உள்ள பயணிகள் அனைவரும் அதனைக் காப்பதில் கவனம் செலுத்துவதைப் போல நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே முன்னேற முடியும், இலக்கை அடைய முடியும் எனத் தெரிவித்தார்.