ரோம் நகரில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி ஒரே உலகம் ஒரே சுகாதாரம் என்ற கொள்கையை வலியுறுத்தினார். 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் 500 கோடி கோவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து இந்தியா உலகிற்கு வழங்க தயார் என்று மோடி தெரிவித்தார்.
இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ரோம் சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி , பிரான்ஸ் அதிபர் மாக்ரோன், உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள், கொரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார மீட்பு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் ஜி 20 மாநாட்டில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்ற தமது கொள்கையை முழங்கினார்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா 500 கோடி தடுப்பூசிகளைத் தயாரித்து உலகின் பல்வேறு நாடுகளுக்குத் தரும் என்று மோடி உறுதியளித்தார். கொரோனா காலங்களில் 150 நாடுகளுடன் தடுப்பூசி மற்றும் மருந்துகளை இந்தியா பகிர்ந்துக் கொண்டதையும் மோடி நினைவு கூர்ந்தார்.
சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்தும் மோடி தமது பேச்சில் வலியுறுத்தினார். கார்ப்பரேட் வரியை 15 சதவீதமாக குறைப்பது என்ற ஜி20 நாடுகளின் முடிவு திருப்தி அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.