கோவாக்சின் தடுப்பூசி போட்டதால் வெளிநாடு செல்ல முடியவில்லை என்றும், மீண்டும் வேறு தடுப்பூசி செலுத்த அனுமதிக் கோரியும் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இரண்டு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களை மீண்டும் தடுப்பூசி போடச் சொல்லி அவர்களின் உயிர்களுடன் விளையாட விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கோவாக்சின் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரி உலக சுகாதார அமைப்பிடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதால் மனுதாரரின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவாக்சினின் 3வது கட்ட பரிசோதனை முடிவுகள் வரும் முன்பே அதற்கு ஏன் அனுமதியளிக்கப்பட்டது என்றும் மனுதாரர் கேள்வியெழுப்பியிருந்தார்.நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 7 கோடி டோஸ்கள் கோவாக்சின் செலுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கோவாக்சினுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மத்திய அரசு தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகியவற்றில் தேர்வு செய்யவும் வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் மே 1 முதல் தான் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டதையும் அவர் அந்த மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்