ஜி-20 மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டார். இத்தாலி, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் அவர் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரோம் நகரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் மரியோ டிராகி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி ரோம் நகருக்கு புறப்பட்டுச் சென்றார். ஜி20 மாநாட்டில் பல்வேறு தலைவர்களுடன் பங்கேற்கும் மோடி, பெருந்தொற்று காலத்தில் உலக பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பது, நிலையான வளர்ச்சி, பருவநிலை மாற்றம் தொடர்பாக விவாதிக்கிறார்.
இத்தாலி பிரதமரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசவும், வாடிகனில் போப்பாண்டவர் பிரான்சிஸை நாளை சந்திக்கவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்கிறார். இதுதவிர பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.