போதைப்பொருள் வழக்கில் முக்கியச் சாட்சியான கிரண் கோசாவி என்பவரைப் புனேயில் மகாராஷ்டிரக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் உள்ளிட்ட மூவரைப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பினர் கைது செய்தனர்.
அதே கப்பலில் இருந்த கிரண் கோசாவி, அவரின் மெய்க் காவலர் பிரபாகர் சைல் ஆகியோர் இந்த வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டனர். போதைப்பொருள் சோதனை முடிந்ததும் ஒருவரிடம் கிரண் கோசாவி 50 இலட்ச ரூபாய் பெற்றுக்கொண்டதாகப் பிரபாகர் சைல் குற்றம்சாட்டிய நிலையில், மிரட்டிப் பணம் பறிப்பதற்காக இந்தச் சோதனை நடத்தப்பட்டதா என்பதைத் தீர்மானிக்கும் முக்கியச் சாட்சியாகக் கிரண் கோசாவி உள்ளார்.
ஒரு மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அவர், முதன்முறையாகக் கப்பலில் தென்பட்டுள்ளார். இந்நிலையில் புனே காவல்துறையினர் கிரண் கோசாவியைக் கைது செய்துள்ளனர். 50 இலட்ச ரூபாய் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், பிரபாகர் சைல் பொய் சொல்வதாகவும், அனைவரின் செல்பேசி அழைப்புகள் குறித்த அறிக்கையில் எல்லாம் தெளிவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.